ஈரோடு: பவானி, கூடுதுறை அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம் செய்தார்.
கோவில் தெப்பக்குளத்தில் நீராடிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பெயரில் அர்ச்சனை செய்தார்.
முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோரின் பெயரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஒவ்வொன்றாக கூற, கோயில் குருக்கள் நாமதேசியா என மந்திரம் கூறி அர்ச்சனை செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மஸ்தான், "தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, வீடு கட்டித் தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி முதல் கட்டமாக 3500 வீடுகளின் கட்டுமானப் பணி நடைபெறுகிறது, இரண்டாம் கட்டமாக 3500 வீடுகள் கட்ட ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக இடத்தினை தேர்வு செய்யும் பணிகளும் துவங்க உள்ளது’ என அமைச்சர் மஸ்தான் கூறினார்.
பவானிசாகரில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு 400-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் பயனாளிகளுக்கு வீடுகளை முதலமைச்சர் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தரப்படும் உதவிகளை உறுதிசெய்க - மத்திய அரசுக்கு உத்தரவு