ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பூம்புகார் ஊராட்சிக்குள்பட்ட முதலாவது வார்டு சுசில் குட்டை கிராமத்தில் 220-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்தக் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லை எனக் கூறியும் பட்டா வழங்கக்கோரியும் வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள், அரசு அலுவலர்கள் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, வனத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில், பட்டா வழங்கினால் மட்டுமே தேர்தலில் வாக்களிப்போம் என கிராம மக்கள் கோரிக்கைவைத்தனர்.
அப்போது, வட்டாட்சியர் பேசுகையில், 'சுசில் குட்டை கிராமத்தில் நீர்வழிப் பாதை இருப்பதால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டா வழங்க முடியாது. ஆனால், தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி பட்டா வழங்க பரிந்துரை செய்கிறோம்' என உறுதியளித்தார்.
இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: