ஈரோடு: பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநில குடியரசு தின தடகள போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார். இந்த தடகள போட்டிகளில் கூகலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான காந்தி கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்தப் பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் கோபிநாத் என்ற மாணவர் (19 வயது) சென்னையில் நடைபெற்ற குடியரசு தின தடகள போட்டியில் பங்கேற்றார். ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபெற்ற மாணவர் கோபிநாத் 55.59 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்துத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதனையடுத்து தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் போட்டிக்கு, கோபிநாத் தமிழகம் சார்பில் தேர்வு பெற்றுள்ளார். மாநில போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோபிநாத் இன்று (நவ.3) பள்ளிக்குச் சென்ற போது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கோபிநாத்தை மேளதாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றதுடன் மாணவரின் பெற்றோருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு, பள்ளி வளாகத்தின் வழிநெடுகிலும் மாணவர் கோபிநாத்தின் சக மாணவ மாணவிகள் நின்று கைத்தட்டி கோபிநாத்திற்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவர் கோபிநாத்திற்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் தங்கப் பதக்கம் வென்ற கோபிநாத்திற்குப் பள்ளி சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியன் 2 க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு! இன்று மாலை வெளியிடுகிறார் ரஜினிகாந்த்!