சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையத்திலுள்ள தனியார் மில்லில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே மில்லில் தங்கி வேலை செய்து வரும் சாரதா என்பவரின் மகன் அபினேஷ், சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.
அபினேஷ் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்குச் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவக்குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அபினேஷ், கடம்பூரிலிருந்து எரிவாயு சிலிண்டரை இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு பின்னால் அமர்ந்து பயணித்துள்ளான்.
சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகே, கோவையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி மோதியதில், சிலிண்டர் உருண்டு அபினேஷ் தலைமீது தாக்கியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவன் உயிரிழந்தான்.
மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற சிவக்குமார் படுகாயங்களுடன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உடை மாற்றும் வீடியோவை யூடியூப் சேனலில் பதிவிட்ட 3 பேர் கைது