ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த எல்லீஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி, நேற்று (நவ.17) தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், குத்து சண்டை வீரர்களுக்கும், அவர்களது பயிற்சியாளர்களுக்கும், உணவு, தங்குவதற்குத் தேவையான இட வசதி, உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் போட்டி ஏற்பாட்டாளர்கள் செய்து தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகப் போட்டியில் பங்கேற்க வந்த வீரர்கள், புல்வெளி, மைதானம் உள்ளிட்ட இடங்களில் தங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதோடு, உணவு வாங்குவதற்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பொதுவாகக் குத்துச் சண்டை குறித்து முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களை, போட்டியின் நடுவர்களாக நியமிப்பர். ஆனால் இப்போட்டியின் நடுவர்களாகக் குத்துச் சண்டைப் பயிற்சி ஆசிரியரை நியமிக்காமல், உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து குத்து சண்டை பயிற்சியாளர் மூர்த்தி கூறும் போது, “குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்களுக்கு, தங்குவதற்குத் தேவையான இட வசதி, உணவு போன்ற அடிப்படை வசதிகளைக் கூட போட்டி ஏற்பாட்டாளர்கள் செய்து தரவில்லை. இது குறித்துக் கேட்ட போது, அவமரியாதையாகப் பேசினர். இந்த குத்து சண்டை போட்டியின் நடுவர்களாகக் குத்து சண்டை பயிற்சி ஆசிரியரை நியமிக்காமல், உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.
இதனால் வெற்றி பெறத் தகுதியுள்ள வீரர்களும் தோல்வியடைய நேரிடும். ஆகவே குத்துச் சண்டைப் பயிற்சி ஆசிரியரை நடுவர்களை நியமித்து போட்டியினை முறையாக நடத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இந்த மாநில அளவிலான குத்து சண்டை போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள், அடுத்த கட்டமாக நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு அருகே சாணியடி திருவிழா.. பக்தர்கள் மீது சாணத்தை வீசி உற்சாக கொண்டாட்டம்!