ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கரோனோ நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அதன் நிர்வாகிகள், அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோரிடம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி, காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ”பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு எளிமையான வழிகாட்டுதலுடன் தேர்வுகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களில் தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
முதலமைச்சரின் ஆலோசனை பெற்று எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு மையங்கள் 3 ஆயிரத்து 684இல் இருந்து 12 ஆயிரத்து 674 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அச்சமின்றி அந்தந்த பகுதிகளிலேயே பொதுத்தேர்வினை எழுதலாம்” என்று தெரிவித்தார்.