கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், வரும் ஜூன் 1ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
ரயில், விமானச் சேவைகளை இயக்கக்கூடாது எனக் கூறும் தமிழ்நாடு அரசு, 10ஆம் வகுப்பு தேர்வை ஏன் இவ்வளவு விரைவாக நடத்த என்ன அவசியம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நேற்று (மே.12) மாலை ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஸ்டாலின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து தேர்வு எழுதுவதற்கு அழைத்துவரப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே சமூக இடைவெளி பேணும் வகையில் அதற்கான வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும், அவர்களின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தேர்வைத் தள்ளிப்போடுவது என்பது மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்கள் படிக்கும் ஆர்வத்துக்குத் தடையாக இருக்கும்.
மாணவர்களின் எதிர்கால கல்வியின் அடிப்படையில் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மலைக்கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கும் தேவையான பேருந்து வசதியும், தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க : 'நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.20 லட்சம் கோடியில் புதிய திட்டம்’ - பிரதமர் மோடி அறிவிப்பு