ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோயில்களில் ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சூரியம்பாளையம் பெருமாள்மலை ஸ்ரீதேவி,பூதேவி சமேத மங்களகிரி பெருமாள் கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும், சிறப்புப் பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி கோயிலில் சிறப்புப் பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முன்னதாக ஆனந்தபெருமாள் திருக்கோல அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மங்களகிரி பெருமாள் சுவாமிகள் காட்சியளித்தனர். மூன்றாவது வார சனிக்கிழமையன்று ஆனந்த சயன அலங்காரத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட மூலவரை காணும் பக்தர்களும் மகிழ்ச்சித் தன்மையை அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த மலையில் அமைந்துள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட படிகளை குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை சிரமப்பட்டு கடந்து வந்து சுவாமியைத் தரிசித்து தாகத்திற்கு தீர்த்தம் குடித்தும், தங்களது பிரச்னைகள் தண்ணீராகக் கரைவதற்காக உப்புக்களை கோபுர தீபத்தின் மீது தூவியும் பக்தர்கள் வழிபட்டனர்.
மலையேறி வந்து பெருமாளை தரிசித்துச் சென்றால் வேண்டியது கிடைக்கும் என்றும் குறிப்பாக மங்களகிரி பெருமாள் திருமணத் தடையை நீக்குவார் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்குவார் என்பதும் புண்ணியக் கோயிலின் முக்கிய மகிமையாக உள்ளது. இந்தக் கோயிலின் பெருமை உணர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் புரட்டாசி சனிக்கிழமைகளில் வந்திருந்து பெருமாளை தரிசித்து வழிபடுகின்றனர். சனிக்கிழமைகளில் அதிகளவில் கூட்டம் வரும் என்பதால் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
அதேபோல் கரோனா நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்திடவும், நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மாவட்ட சுகாதாரத் துறையினர் ஈடுபட்டிருந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவில் சேரும் கூட்டத்தை கட்டுப்படுத்திடவும், கண்காணித்திடவும் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: