ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் கிராமத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஆடு மற்றும் கோழி திருட வந்ததாகக் கூறி, இரண்டு பட்டியலின மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கி, சிறுநீர் கழித்தது தொடர்பாக அடையாளம் தெரியாத 20 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட 20 பேரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பைச் சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி ஆடு கோழியைத் திருடியவர்களை ஊக்குவிப்பதாக, எதிர் தரப்பைச் சார்ந்தவர்கள் இன்று (டிச.07) போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
அதேபோல், வழக்குப் பதிவு செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பைச் சார்ந்தவர்களும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், இரு தரப்பினர் இடையே நிலவும் பிரச்னையைக் கருத்தில் கொண்டு, கோபிசெட்டிபாளையம் பகுதியில் போராட்டம், பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
வழக்கின் பிண்ணனி என்ன?: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து ஆடு மற்றும் கோழிகள் திருடப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் இரவு நேரங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் ஆடு திருட வந்ததாகக் கூறி இரண்டு பட்டியலின மாணவர்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் மீது சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஆடு திருடியதாக இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் தாக்கியதுடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து சாதிய வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறி, பல்வேறு சமூக அமைப்புகள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பழங்குடியினர் ஆணைய தலைவர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர், சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லையில் பட்டப்பகலில் தொழிலதிபர் வெட்டி கொலை.. நீதிமன்றம் அருகே நடந்த கொடூரம்!