ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள ராமநாதபுரம் பகுதியில் நல்லசிவம் என்பவருக்குச் சொந்தமான விவசாயத்தோட்டம் உள்ளது. இந்த விவசாயத் தோட்டம் அருகே 50 அடி ஆழம் கொண்ட கிணறொன்றும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 9) காலை விவசாயத் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், விதைகள், சிந்திக்கிடக்கும் தானியங்களை இரையாக்க மயில் கூட்டம் வந்துள்ளது. அப்போது அக்கூட்டத்தில் உள்ள மயில் ஒன்று, அந்த 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்தது.
இது குறித்து விவசாயி நல்லசிவம், பவானி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த மீட்புப்படை வீரர்கள் கயிற்றைக் கட்டி, கிணற்றில் இறங்கி, தண்ணீரில் மூழ்கி இருந்த தேசியப் பறவையான மயிலை பத்திரமாக மீட்டு, பாதுகாப்புடன் மேலே கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட மயிலை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களையும், விதைகளையும் கொத்தித் தின்று பாதிப்பை ஏற்படுத்திய மயில் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தபோது, அதனை மீட்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரை அழைத்து, அதன் உயிரைக் காப்பாற்றிய விவசாயியை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்