ஈரோடு அருகேயுள்ள தொட்டிப்பாளையம் ரயில்வே இருப்புப்பாதையில் இரண்டாவது முறையாக இன்று (ஆகஸ்ட் 4) அதிகாலையில் கற்களைக் கொட்டி வைத்து சரக்கு ரயில்களைக் கவிழ்க்க மேற்கொண்ட முயற்சியில் அடையாளம் தெரியாத நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இருப்புப்பாதையில் கற்கள் இருப்பதைக் கண்ட சரக்கு ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தி பாதையிலிருந்த கற்களை அகற்றி விட்டு, ரயில்வே அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து ரயில்வே துறை முதன்மை பொறியாளர் பாலயுகேஷ், ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினரிடம் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இருப்புப்பாதையில் கற்களை குவித்து வைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே இருப்புப்பாதையில் தொடர்ந்து கற்களை வைத்து ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் அடையாளம் தெரியாத நபர்களைப் பிடிப்பதற்காக, ரயில்வே காவல்துறையின் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தொட்டிபாளையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இருப்புப்பாதையில் 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பு பாணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில்வே காவல்துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ரயில்வே இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் காவலர்களுக்கு விளக்கிக் கூறினார்.
மேலும் வருகிற சுதந்திரத் தினத்தை குலைப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கையில் யாரேனும் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்தும் விசாரணையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இருப்புப்பாதையில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிபவர்களைப் பாதுகாப்பு கருதி கைது செய்து, தனிப்படைக் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட வேண்டும் என்றும் ஆய்வாளர் அறிவுறுத்தினார்.