ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் சீதா லட்சுமி, பவானிசாகர் தொகுதி வேட்பாளர் சங்கீதாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "விடுதலைப் போரில் வென்ற தீரனுக்குப் பேரன் எங்கள் பிரபாகரன். அதிக இளைஞர்களைக் கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி ஒன்றுதான்.
நான் மக்களை இணைக்க வந்தவன். இலவசம் என்பது கவர்ச்சித் திட்டம்; வளர்ச்சித் திட்டமல்ல. அரசு ஆறு லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இலவசங்களுக்கு யாரும் தங்களது கை காசு போட்டுக் கொடுப்பதில்லை.
மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கின்றனர். திமுக கட்சி அரசியல் கட்சியா குடும்ப கட்சியா? அது ஒரு பெருநிறுவன கட்சியாக உள்ளது. அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்கும் தேவையைப் பூர்த்திசெய்வதே. இலவசங்கள் குறித்து அவர்கள் பேசுவார்கள் நான் பேசமாட்டேன். நான் ஓட்டுக்கானவன் இல்லை; நாட்டுக்கானவன்.
இரு கட்சிகளும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறிமாறி பதவியில் அமரவைத்து ஏமாந்து போனீர்கள். வெளிப்படையான கட்டமைப்பு நமது ஆட்சியில் நடைபெறும்.
கல்வித் தரத்தை தனியார் முதலாளிகளுக்கு இணையாகக் கொண்டுவர அனைத்து அரசு உயர் அலுவலர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்படும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சைப் பெற வேண்டும் எனச் சட்டம் இயற்றப்படும். உலகின் தலைசிறந்த நாடாகவும் பத்தாண்டுகளில் பச்சை பசேல் என பசுமை தாயகமாக மாற்ற எங்களுக்கு வாக்களியுங்கள்.
அடுத்த ஐந்தாண்டுகள் உங்கள் எதிர்காலம் சிறக்க வேண்டுமெனில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் எங்களுக்கு வெற்றியைத் தாருங்கள்" எனப் பேசி வாக்குச் சேகரித்தார்.