ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் குளித்து விளையாட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி வரும் நபர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், வாசிங்டன் நகர் பகுதியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பவானி ஆற்றில் இன்று குளிக்க வந்துள்ளனர். அப்போது குரு என்ற 12ஆம் வகுப்பு மாணவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர், ஆற்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். உடன் வந்த நண்பர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ஆற்று நீரில் மூழ்கினார்.
இது குறித்து காவல்துறையினருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குருவை சடலமாக மீட்டனர். அதனை தொடர்ந்து மீட்கப்பட்ட குருவின் சடலத்தை காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மாணவர் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்றும் அறிவிப்பு பலகை வைத்துள்ளபோதும் குளிக்க வரும் பொதுமக்கள் அதை பொருப்படுத்தாமல் ஆழமான பகுதிக்கு செல்வதினால் தொடர் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது. அதனால், ஆற்றில் குளிக்க வரும் மக்கள் காவல்துறையினரின் அறிவிப்பை ஏற்று நடந்துக் கொள்ளவேண்டும் என்றும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.