ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி கொடிகள் காய்ந்து சருகாகின. இதேபோல் வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் தடுப்பணைகளில் நீர் வற்றியதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, வறட்சி நீங்கி காய்ந்து கிடந்த மரம் செடிகொடிகள் துளிர்த்து பச்சை பசலென பச்சைக்கம்பளம் போர்த்தியது போல அழகாக காட்சி அளிக்கிறது.
வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் மற்றும் வனகுட்டைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வன விலங்குகளின் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள சாலைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பசுமையாக காட்சியளிக்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் தொடர் மழை - விபத்தில் சிக்கும் வாகனங்கள்