ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே பவானி ஆற்றின் கரையோரத்தில் வரசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் முன்பு பவானி ஆற்றின் படித்துறையை ஒட்டி முன் மண்டபம் கட்டுவதற்காக கடந்த மாதத்தில் கோயில் கமிட்டி சார்பில் பணிகள் தொடங்கப்பட்டன.
இதையறிந்த இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது இந்தப்பகுதியில் சிலைகள் கரைக்கப்படுகின்றன எனவே மண்டபம் கட்டினால் விநாயகர் சிலைகளை கரைப்பதில் சிரமம் ஏற்படும் எனவும், பொதுமக்கள் துணிகளை துவைப்பதற்கு இடையூறு ஏற்படும் எனவும் கூறி மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மண்டபம் கட்டுவதற்கான பணிகள் நிறுத்தப்பட்டு, சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பவானிசாகர் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் சுப்பையா, உதவி பொறியாளர் ராமசாமி, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டி தலைவர் சின்னசாமி, இந்து முன்னணி நிர்வாகி சிவசக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில், கோயில் மற்றும் மண்டபம் கட்டப்படும் பகுதி பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம் என்பதால் இந்த இடத்தில் எந்தவித கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வட்டாட்சியர் கணேசன் இப்பகுதியில் மணி மண்டபம் கட்ட அனுமதி இல்லை என கோயில் கமிட்டி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பவானி காவிரி ஆற்றில் தொடரும் மணல் திருட்டு - மாஃபியா கும்பல் அட்டூழியம்!