ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் ஏராளமான காகித நூற்பாலைகள் உள்ளன. இதனால், அப்பகுதியில் கட்டுமானப் பணிகளில் அதிகமான வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தொடங்கிய ஊரடங்கு உத்தரவு, மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலம் செல்ல விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் குறித்த பட்டியலை சத்தியமங்கலம் நகராட்சி தயாரித்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, இதுபற்றிய அறிவிப்பை ஒலிப்பெருக்கி மூலம் வீதி வீதியாக நகராட்சி அறிவித்துள்ளது. சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பினால், நகராட்சி அலுவலர் அல்லது வீடு கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களிடம் தங்கள் விவரங்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஈரோடு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டத்திற்குச் செல்ல விரும்பும் தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தை, சத்தியமங்கலம் நகராட்சியில் தெரிவிக்கலாம் என வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் ஒரேநாளில் 20 பேருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமங்கள்!