ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை பள்ளத்து மாகாளியம்மன் கோயில், கொத்தமங்கலம் மாரியம்மன் கோயில் ஆகிய இரண்டு கோயில்களின் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக பவானிசாகர் காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பவானிசாகர் காவல் துறையினர், இந்த இரண்டு கோயில்களிலும் திருட்டு சம்பவம் நடைபெற்றது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கொத்தமங்கலம் மாரியம்மன் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது மூன்று இளைஞர்கள் கையில் வேலுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கோயில் முன்பு இறங்கி கொண்டு வந்திருந்த வேலை பயன்படுத்தி கதவின் பூட்டை உடைத்துள்ளனர்.
கோயிலுக்குள் மூன்று பேரும் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிக்கொண்டு ஓடிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பவானிசாகர் காவல் துறையினர் அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது காராச்சிகொரைமேடு பகுதியிலிருந்து புதுபீர்கடவு செல்லும் சாலையில் ஓரமாக வனப்பகுதியில் உண்டியல் கிடந்தது தெரியவந்தது.
உண்டியலில் சுமார் ஐயாயிரம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், உண்டியலை திருடிச் சென்ற மூன்று பேரும் பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதியில் கோவில் திருட்டு ஏதும் நடைபெறாத நிலையில், தற்போது மீண்டும் கோயிலில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 2 ஏக்கர் நிலம் திமுகவின் கண் துடைப்பு வேலை - எடப்பாடி பழனிசாமி தாக்கு!