திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்தவர்கள் காளியப்பன்-தனலட்சுமி தம்பதி. இவர்களது, இரண்டு பெண் குழந்தைகள் திருப்பூர் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைப்பார்ப்பதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட தனிப்படை காவல் துறையினர், திருப்பூர் டிஎஸ்பி பாஸ்கர் ஆகியோர் இன்று தனியார் நூற்பாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருவாரூர் குடவசாலைச் சேர்ந்த இரு பெண் குழந்தைகளை நவ.19ஆம் தேதி அவரது பாட்டி விஜயலட்சுமி அழைத்து வந்து நூற்பாலையில் வேலைக்கு சேர்த்ததாகக் கூறப்படுகிறது. நூற்பாலை நிர்வாகத்திடம் குழந்தைகளின் பெற்றோர் இறந்துவிட்டதாக தவறான தகவல் தெரிவித்து பெண் குழந்தைகளின் சகோதரர் சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரத்து பணம் பெற்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இரு பெண் குழந்தைகளும் பள்ளிக்கு வராததால் சந்தேகமடைந்த திருவாரூர் பள்ளி ஆசிரியர் குழந்தைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருபெண் குழந்தைகள் தனியார் நூற்பாலையில் வேலை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திருவாரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மைனர் பெண் குழந்தைகள் தனியார் நூற்பாலையில் பணியாற்றுவதாகக் கூறி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் புகாரளித்ததின் பேரில், இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது குறித்து காவல் துறையினர் திருவாரூரிலுள்ள குழந்தைகளின் பாட்டியிடம் விசாரணை நடத்தினர். சின்னபாட்டி எனக் கூறப்படும் சாந்தி என்பவர் வெள்ளிக்கிழமை காலை நூற்பாலைக்கு வந்து பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி கூட்டி சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தொடர்ந்து மில் நிர்வாகத்திடம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படடையில் மேற்கொண்ட ஆய்வில் 30 அசாம் தொழிலாளர்கள் மற்றும் 19 உள்ளூர் பெண் தொழிலாளர்கள் வேலை செய்தது தெரியவந்தது. இங்கு பெண் குழந்தைகள் வேலை செய்துள்ளதற்கான ஆதாரங்களையும் அவர்கள் திரட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுவையில் குடியுரிமைச் சட்டம் இல்லை - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்