ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் விவசாயி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு புனிதா என்ற மகளும், சபரீஷ் என்ற மகனும் உள்ளனர். லட்சுமி குடும்ப பொருளாதார சூழல் காரணமாக தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் தினசரி கூலி தொழிலாளியாக வேலைக்கு சென்றுவருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு (மே 17) சிக்கரசம்பாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் கம்பெனி வேனிலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது லட்சுமியை பின் தொடர்ந்த அடையாளம் தெரிய நபர்கள் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் லட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு வேகமாக தப்பி ஓடியுள்ளனர். இதில் லட்சுமி நிகழ்விடத்திலேயே பலியானர்.
இதை பார்த்த பொதுமக்கள் உடனே சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், காவலர்கள் நிகழ்விடத்திற்கு வந்தனர்.
பின் லட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் லட்சுமியை கழுத்தறுத்து கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லட்சுமியின் சடலம் கிடந்த இடத்திற்கு அருகே புதியதாக வாங்கப்பட்ட கத்தி ஒன்று காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.
பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பெண்ணை சாலையில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.