ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாரனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தண்டியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
இந்நிலையில் நீர் தேக்கத் தொட்டியின் மேல் உள்ள கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதோடு மட்டுமல்லாமல், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.