சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒரு லட்சத்து நான்காயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன.
மழைப்பொழிவுக்குப் பின் வனத்தில் வாழும் பாலூட்டிகள், பறப்பன, ஊர்வன, பல்வேறு வகையான தாவரங்கள், மரங்கள், நீர்நிலைகள், வன உயிரினங்கள் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியது. மேலும் இதற்கென சிறப்புப் பயிற்சிப் பெற்ற வன ஊழியர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தக் கணக்கெடுப்பில் செல்போன் மூலம் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பதிவுசெய்யப்பட்டதோடு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் பதிவு மூலம் கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட இடம், கணக்கெடுப்பு தூரம், அங்கு பார்த்தவற்றைப் பதிவுசெய்வது என அந்தந்த இடத்தில் நடந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்தனர்.
விளாமுண்டி வனவர் முனுசாமி தலைமையில் இன்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இந்தக் கணக்கெடுப்பில் குட்டியுடன் சென்ற புலியின் கால்தடம், சிறுத்தை கால்தடம், காட்டெருமை, கேளையாடு சாணம், புதர்மறைவில் பதிவான சிறுத்தை தடயம் ஆகியவற்றைப் பதிவுசெய்தனர்.
மேலும் ரேஞ்சு பைண்டர் மூலம் தொலைவில் உள்ள வனவிலங்குகள் நடமாட்டத்தையும் நீர்நிலைகளையும் ஆய்வுசெய்தனர். 5 கி.மீ. பரப்பளவிற்கு கண்ணில் தென்படும் வனவிலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள், மரங்கள் என அனைத்தும் குறிப்பு எடுத்து அனுப்பினர்.
சத்தி புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, டி.என். பாளையம், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம, விளாமுண்டி, கடம்பூர் உள்ளிட்ட 10 வனச்சரகத்தில் 425 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் வனவர் தலைமையில் ஐந்து பேர் இதில் பணியில் உள்ளனர்.
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் அருகே முள் வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு!