ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வரதம்பாளையம், பெரியகுளம், புளியங்கொம்பை, சிக்கரசம்பாளையம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளன.
இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் பறிக்கப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், மைசூர், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் சத்தியமங்கலம் மலர்கள் சந்தை மூடப்பட்டதால் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பங்கி மலர்கள் பறிக்கப்படாமல் செடியில் பூத்து குலுங்குகின்றன. இதனால், செடியில் பூக்கள் அழுகி பூச்சி நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பூச்சி நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு சில விவசாயிகள் செடியிலிருந்து மலர்களை பறித்து கீழே கொட்டுகின்றனர். அந்த வகையில், பெரியகுளம் பகுதியில் பறிக்கப்பட்ட 16 டன் சம்பங்கி பூக்கள் அப்பகுதியில் உள்ள சாலையோர பள்ளத்தில் கொட்டப்பட்டன.
சத்தியமங்கலத்தில் நாள்தோறும் 20 டன் பூக்கள் மகசூல் செய்யப்படுகின்றன. அதில் 4 டன் பூக்கள் மட்டுமே சென்ட் பேக்டரிக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 16 டன் பூக்கள் வீணாக கீழே கொட்டப்படுகின்றன.
இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகியிருப்பதால் பல கோடி ரூபாய் பூ வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி - வேதனையில் விவசாயிகள்!