ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் கரூர் வைஸ்யா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கிளை மேலாளராக பணி புரியும் சத்தியமங்கலம் கொங்கு நகரை சேர்ந்த 45 வயதுடைய நபருக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் நகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் வங்கிக்குச் சென்று வங்கியில் பணிபுரியும் 7 ஊழியர்கள் உட்பட 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனைக்காக சளி மாதிரிகளை சேகரித்தனர்.
வங்கி வளாகம் முழுவதும் நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். இதையடுத்து வங்கி உயர் அலுவலர்களின் அறிவுரையின் பேரில் வங்கிக் கிளை மூடப்பட்டது. பண பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படாது என வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும், வங்கியை ஒட்டி செயல்படும் ஏடிஎம் மையம் வழக்கம்போல் செயல்பட்டது.