ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்ட காஜனூரில் விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. கோடை விடுமுறை என்பதால் அந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து மைதானத்தை தாண்டி வெளியே சென்றது.
அதனை எடுக்கச் சென்ற இளைஞர்கள் பந்தின் அருகே இரு சாரைப் பாம்புகள் பின்னிப் பிணைந்து ஆனந்தமாய் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டு பயந்து ஓடினர். அதில் சில இளைஞர்கள் பாம்புகள் விளையாடிக் கொண்டிருப்பதை செல்போனில் படம்பிடித்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாம்புகளை பார்க்க ஆர்வத்துடன் திரண்டு வந்தனர். பாம்பின் அருகே எவரும் செல்ல வேண்டாம் என்றும், அதனை துன்புறுத்த வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து சுமார் அரை மணி நேரத்துக்கு பின்னர் பாம்புகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தன. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.