ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும், இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், மேலும் பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடந்த 23ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, நேற்றைய முன்தினம் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராகவன் முன்னிலையில், மாநகராட்சி உதவி ஆணையர் சுதா, தொழிற்சங்க நிர்வாகிகள் எல்பிஎப் மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, 7வது நாளாக நேற்றும் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம், தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்துடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில், 8வது நாளாக தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக காளை மாட்டு சிலை அருகில் தூய்மைப் பணியாளர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, 8வது நாளாக தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வதால் ஈரோடு மாநகராட்சி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1,800 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். 500 நிரந்தர தூய்மைப் பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 257 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது தவிர மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மைப் பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர். வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாநகர பகுதியில் ஆயிரம் டன் குப்பைகள் தேங்கியுள்ளது.
பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசிச் சென்றுள்ளதால் குப்பைகள் மலைபோல் தேங்கி, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி சார்பில் 300க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களை வைத்து குப்பைகள் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஸ்பாட் டெக்னாலஜி மூலமாக பால் கொள்முதல் அதிகரித்து உள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்