சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாபேட்டை பூங்காடு காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்தப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சேலம் மாநகர பகுதியில் பெய்த கன மழை காரணமாக , மழை நீர் 10 நாள்களாகியும் முழுமையாக வடியாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக , சாலை காணப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் சேலம் மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த பூங்காடு காலனி மக்கள் இன நாற்று நடவு செய்யும் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் உறுதி அளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். பொதுமக்களின் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:குற்றால அருவிகளில் குளிக்க அனுமதியா?