ஈரோடு: மஞ்சள் விவசாயத்திற்கும், ஏற்றுமதிக்கும் தலைசிறந்த ஊராக இருக்கும் ஈரோடு ஜவுளி உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் ஆசிய அளவில் பெயர் பெற்ற ஊராக இருந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் புத்தாடைகளை வாங்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
ஈரோட்டில் ஜவுளிக் கடைகள் அதிகம் உள்ள பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கட சாமி வீதி, காவிரி சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினருக்குமான ஜவுளி விற்பனை கடைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து தங்களது குடும்பத்தாருக்குத் தேவையான புத்தாடைகளை வாங்கி செல்கின்றனர்.
பொதுமக்களின் வருகை காரணமாக ஈரோடு நகரம் காவல் துறையின் சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் புத்தாடைகளை வாங்கப் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரி நகரில் பட்டாசு கடை வைப்பதற்கு தீயணைப்புத்துறை அனுமதி வழங்குவதில் இழுபறி