ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மானாவாரி விவசாயமான மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மக்காச்சோளம் பால் பிடித்து அறுவடைக்குத் தயாரான நிலையில் இருப்பதால் யானை, காட்டுப்பன்றி விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதி வனத்தையொட்டியுள்ள சுஜில்கரை கிராமத்தில் விவசாயிகள் மக்காச்சோளம் காட்டில் வழக்கமான விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனத்திலிருந்து கூட்டம் கூட்டமாக 50க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காசோளப் பயிரை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. மேலும், விவசாயப் பணியிலிருந்த தொழிலாளர்களை பன்றிகள் தாக்க முயற்சித்தபோது அவர்கள் தப்பியோடினர்.
கெம்பராஜ் என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்குத் தயாரான ரூ.1 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் சேதமடைந்தது. இதேபோல் 10க்கும் மேற்பட்ட விவாசயிகள் பயிர்கள் சேதமடைந்ததால் வனத்துறை இழப்பீடு தர வேண்டும் எனவும், தொடர்ந்து காட்டுப்பன்றியால் பாதிப்பு ஏற்படும்போது விவசாயிகள் காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.