ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி பாலசுப்பிரமணியம் வீதியைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (56). இவர் புஞ்சைபுளியம்பட்டி - கோவை சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் எதிர்புறம் மரக்கடை ஒன்றும், சித்த வைத்தியசாலையும் நடத்தி வருகிறார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு மரக்கடை வியாபாரம், சித்த வைத்தியம் பார்த்த வகையில் 95 ஆயிரம் ரூபாய் பணத்தை மரக்கடையில் உள்ள மேஜை டிராவில் வைத்து பூட்டிவிட்டு வழக்கம் போல் சாகுல் ஹமீது வீட்டிற்கு த் திரும்பியுள்ளார்.
பின்னர், ஜுன் 29ஆம் தேதி காலை சென்று பார்த்தபோது மரக்கடை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது கடைக்குள்ளே சென்று பார்த்தபோது மேஜை டிராவில் இருந்த 95 ஆயிரம் ரூபாய் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சாகுல் அமீது புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மரக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் குற்றவாளியைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மரக்கடையில் திருடியவர் அன்னூரைச் சேர்ந்த தர்மராஜ் என்பதும், அன்னூரில் உள்ள உணவகம் ஒன்றில் அவர் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதனையடுத்து நேற்று (ஜூலை 3) அன்னூரில் அவரது வீட்டில் வைத்து தர்மராஜை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் ஏற்கனவே புளியம்பட்டியில் மருந்து கடையில் மருந்துகளை திருடியதாக புளியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மரக்கடையில் பணம் திருட்டு: போலீஸ் விசாரணை