ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள நொச்சிக்குட்டையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி கண்ணம்மாள் (56), முருகேசன் என்பவரது மனைவி ராஜாமணி ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தபோது அவர்களை காவல் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 70 கிராம் (தலா 10 கிராம் எடை கொண்ட 7 பாக்கெட்டுகள்) கஞ்சா பாக்கெட்டுகள், மேலும் கையில் வைத்திருந்த ரொக்கம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.