ஜம்முவில் இருந்து கன்னியாகுமரிக்கு கடந்த 17ஆம் தேதி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் இன்று காலை 8.30 மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலான இந்த ரயிலில் ஈரோட்டில் இறக்கவேண்டிய பார்சல்களை எடுப்பதற்காக பார்சல்கள் உடைக்கப்பட்டபோது அதில் இருந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
![himsagar-express](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4487458_himsagar123.jpg)
இதையடுத்து ஊழியர்கள் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் காலி அட்டைப்பெட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட திருடுபோன பார்சலில் 10 எல்இடி டிவிக்கள், பிரிட்ஜ், மடிக்கணினி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றுக்கான கொள்முதல் ரசீது சீட்டு கோவை ரயில் நிலைய கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், எங்கிருந்து யாருக்கு இந்த பொருட்கள் அனுப்பப்பட்டன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
ஏற்கனவே ஓடும் ரயில்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவதை தடுக்கும் வகையில் ரயில்வே துறை சிசிடிவி கேமராக்களை பொருத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், அதனை விரைவுப்படுத்தி ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.