ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கோவில்புதூர் சவாரி கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் துளசியம்மாள் (74). இவர் தனக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்துவருகிறார்.
இந்த நிலையில் துளசியம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் அவரது வாயைப் பொத்தி வீட்டின் பின்புறம் தூக்கிச்சென்று அவர் அணிந்திருந்த சேலையைக் கிழித்து மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப்போட்டனர்.
![மூதாட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-04-sathy-theft-vis-tn10009_02102021201144_0210f_1633185704_57.jpg)
பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி துளசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல், கம்மல் என மூன்று பவுன் நகைகளையும் அவர்கள் பறித்ததோடு அவர் கையில் வைத்திருந்த பீரோ சாவியைப் பிடுங்கி பீரோவிலிருந்த ரூ.15,000 பணத்தை கொள்ளையடித்துத் தப்பிச்சென்றனர்.
ஒரு வழியாக வெளியே வந்த துளசியம்மாள் இட்ட கூச்சல் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் கை, கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டனர். இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர். மூதாட்டியைக் கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக சார்பில் களம்கண்ட எம்எல்ஏ வேட்பாளர் கைது