சாலைவிதிகளைப் பின்பற்றி, விபத்துகளில் சிக்காமல் சாலைகளில் பாதுகாப்பாகப் பயணிப்பது குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தச் சாலைப் பாதுகாப்பு வார காலக்கட்டத்தில் சாலை விதிகளைப் பின்பற்றுதல், சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, விபத்துகள் நேராமல் வாகனங்களை இயக்குவதன் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்து வழக்கமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.
இந்தாண்டிற்கான சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஈரோடு வட்டாரப் போக்குவரத்துத் துறையின் சார்பில், விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.
ஈரோடு, சம்பத் நகர் பகுதியில் தொடங்கிய வாகன பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தியவர்கள் கைது