ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள கொண்டையம்பாளையத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த எட்டு நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெண்களும், குழந்தைகளும், வேலைக்குச் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கத்திரி வெயில் தாக்கிவரும் வேளையில் கொண்டையம்பாளையத்தில் குடிநீர் விநியோகிக்கப்படாததால் கிராம மக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் குடிநீரின்றி தவித்து வருகின்றன.
மேலும், இது குறித்து கொண்டையம்பாளைய மக்கள் கிராம நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் நம்பியூர் புன்செய் புளியம்பட்டி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொண்டையம்பாளைய மக்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னையை சரி செய்வதாக வாக்குறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.