ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அருகே உள்ள பசுவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள், கர்நாடக மாநிலம் ஹனூரில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வாடகை பேருந்தில் சென்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்து ஊர் திரும்பியபோது பசுவனாபுரம் சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்து வளைவில் திரும்புகையில் எதிர்பாராவிதமாக பாறை மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த சந்திரா, ரோஜா, ரீதா, பைரி, மாதேஸ்வரி உள்ளிட்ட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த 5 பேரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.