ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் பழங்குடியினர் கலாசார அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பவானிசாகர் வனச்சரகத்தில், காராச்சிக்கொரை பகுதியில் 20 ஹெக்டேர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.7 கோடி செலவில் கட்டுமானப்பணி தொடங்கியது.
இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்கள் வனம், வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், பாரம்பரிய முறைகள், பழங்குயின் மக்கள் பயன்படுத்தியப் பொருட்கள், விவசாய முறைகள், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், பயன்பாட்டு இசைக் கருவிகள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
![சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/3101393_sathiyamangalam.jpg)
மேலும், இங்கு சங்க இலக்கியம் ஸ்டுடியோ அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்களுக்கு இயற்கை முறையில் நடைபாதை அமைத்தல், பழங்குடியின கலாசார உள் மற்றும் வெளியரங்கம் - மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் தங்குவதற்கான கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடந்துவருகின்றன.
ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலைத்தொட்டி அமைத்து குடிநீர் வசதி, உள்ளிட்டத் தேவையான கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது 70 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் புலிகள் காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.