ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் வனத்தையொட்டி அரேப்பாளையம் கிராமம் உள்ளது. இப்பகுதி மக்கள் காவல்தெய்வமாக பிசில் மாரியம்மன் கோயில் சுயம்பு கற்சிலையை வழிபட்டு வந்தனர்.
கட்டடமின்றி திறந்தவெளியில் இக்கோயில் உள்ள பகுதியில் யானை நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் திறந்தவெளியில் இருப்பதால் வனவிலங்குகள் தாக்குதலை தவிர்க்க கோயிலை மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளை வனத் துறையினர் செய்தனர். இதில் பூசாரிகள் மட்டும் ஏற்றுக்கொண்ட நிலையில் வனத் துறையினர் நேற்று (அக். 14) கற்சிலையைப் பிடுங்கினர்.
தகவலறிந்து வந்த ஊர்மக்கள் மக்களிடம் கருத்து கேட்டகாமல் சிலையை அகற்றக்கூடாது என வாதிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அங்குவந்த மாவட்ட வன அலுவலர் கேவிஏ நாயுடு தலைமையில் வனத் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் அரேப்பாளையம் வந்து சம்பவயிடத்தை ஆய்வுசெய்தார். அதனைத் தொடர்ந்து கிராம மக்களைச் சந்தித்து அகற்றப்பட்ட சாமி கற்சிலையை மற்றொரு இடத்தில் வைத்து வழிபடுதவதற்கு மாற்று இடம் தருவதாக உறுதியளித்தார்.
கோயிலுக்கு உரிமையுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களிடம் கருத்துகேட்டு பதில் அளிப்பதாக அவர்கள் தெரிவித்தையடுத்து கோயில் பிரச்னை முடிவுக்கு வந்தது.