ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு 434 மாணவிகள் 343 மாணவர்கள் என 777 மாணவ, மாணவிகளுக்கு 32 லட்சத்து 88 ஆயிரத்து 831 ரூபாய் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் தேவையான அளவு ஆசிரியர் எண்ணிக்கை படிப்படியாக பூர்த்தி செய்யப்படும். ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்படும். இப்பணிகள் அனைத்தும் ஒரு மாதத்தில் நிறைவடையும்.
2013 முதல் 2015ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தகுதி அடிப்படையில் மதிப்பெண் பெற்றவர்கள் என வேலைவாய்ப்பில் எவ்வளவு பணிகள் இருக்கின்றதோ அதை பொருத்து பணிகள் நியமனம் செய்யப்படும். கூடுதலாக பணிகளை நிறைவேற்ற வேண்டும் எனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எவ்வளவு காலி பணியிடங்கள் இருக்கின்றது என்பதை அரசு அட்டவணையில் வெளியிட்டு பின்னர், மீண்டும் தேர்வு அறிவிக்கப்படும்.
பெண்கள் பள்ளியில் கழிவறையை தூய்மையாக பராமரிக்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நிதி பெறப்பட்டவுடன் கூடுதலாக இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பள்ளிகள் தூய்மையாக பராமரிக்கப்படும்" என தெரிவித்தார்.