ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது.
இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் வடகிழக்குப் பருவமழை காரணமாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று (டிச.13) பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 627 கனஅடி ஆக இருந்த நிலையில் இன்று (டிச.14) நீர்வரத்து 5 ஆயிரத்து 348 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.63 அடியாகவும், நீர் இருப்பு 32.4 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீராக 1500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணை: 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை