ஈரோடு கைக்காட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவருடைய உறவினர் ஒருவருக்கு திருமணமாகி 15 ஆண்டகளாக குழந்தை இல்லாததால் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து சிகிச்சை மூலம் கருவுற்ற அவருக்கு 8 மாதம் ஆனநிலையில் குழந்தை வயிற்றிலேயே இறந்தது. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் இருந்த அவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த கணேஷ் - ரேவதி மூலம் இடைத்தரகர் பாலகிருஷ்ணன் அறிமுகமாகினர்.
பின்னர் இவர்களின் மூலமாக ஒரு வருடங்களுக்கு முன்பு குழந்தை ஒன்றை வாங்கி கடந்த 6 மாதங்களாக வளர்த்து வந்தனர். அந்த குழந்தைக்கு விலையாக ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் குழந்தையை வாங்கியவரிடம் சென்ற கணேஷ், ரேவதி, பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் குழந்தையை கொடுத்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதால் குழந்தையை மீண்டும் வாங்கிச் சென்றுள்ளனர்.
அவர்களிடம் குழந்தையை வாங்கியவர்கள் அதற்காக அளித்த பணத்தை திருப்பி கேட்ட போது, வேறு குழந்தை வேண்டுமென்றால் வாங்கி கொள்ளலாம் என்றும், பணம் திருப்பி கேட்டு காவல்நிலையம் சென்றால் உங்களுக்குதான் பிரச்சனை என்றும் கணேஷ், ரேவதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் மிரட்டியுள்ளனர்.
இதற்கிடையே இன்று ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் குழந்தை வாங்கியவர்களின் உறவினர்களான சுந்தர் புகார் மனு அளித்தார். அதில் குழந்தை தருவதாக கூறி மோசடி செய்த இடைத்தரகர்களான கணேஷ், ரேவதி , பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.