ஈரோடு: பள்ளி மாணவர்கள் வரலாற்றின் முக்கியத்துவத்தை அறியும் வகையில் அவற்றின் சான்றுகளைக் காண்பிக்கும் விதமாகப் பள்ளி சார்பில் அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், ஈரோட்டில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் புதியதாக வைக்கப்பட்டிருக்கும் அரிய வகையிலான கல்லாகிய மரத்தைப் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள வ.உ.சி பூங்கா மைதானம் பகுதியில் தமிழக அரசின் சார்பில் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் அரியவகை புகைப்படங்கள், பழங்கால கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் சிலைகள் என பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியில் கிடைத்த அரியவகை கல் மரம் (மரபுதை படிவம்), தனியார்ப் பள்ளி பங்களிப்புடன் அரசு அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகளின் எச்சங்களும், தாவரங்களின் எச்சங்களும் இயற்கையாகப் பூமியில் புதைந்து பாதுகாக்கப்பட்டு இருப்பதே புதை படிவங்கள் ஆகும்.
இத்தகைய அரிதான இந்த புதைப் படிவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் முந்தைய காலத்தில் வாழ்ந்த விலங்குகளைப் பற்றியும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் அறிய முடியும். அந்த வகையில், கால மாற்றத்தின் போது புவிக்குள் புதையுண்ட மரங்களிலிருந்து கரிமப் பொருட்கள் சிதைவடைந்து, புவியின் இயற்பியல் மாற்றங்களினால், நாளடைவில் அம்மரத்தில் உள்ள கரிமப் பொருட்கள் இறுகிப் புதை படிவமாக மாறுகின்றன.
அத்தகைய மரபுதைப் படிவமே இந்த கல் மரம். அந்த வகையில், இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கல் மரம், ஈரோட்டில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அடித்து, இன்று (நவ.30) முதல் அனைவரின் பார்வைக்காகவும் காட்சிப்படுத்தப்படும் என அருங்காட்சியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே, அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த அரிய வகையிலான கல் மரத்தைக் காண அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து, ஆர்வத்துடன் மரத்தைப் பார்த்து ரசித்தனர். அப்போது, அருங்காட்சியக நிர்வாகிகள் கல் மரம் உருவாகும் முறைகள் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் அனைவருக்கும் எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி; எழும்பூர் அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகத்தைச் சூழ்ந்த மழை நீர்!