ஈரோடு: புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரத வழிபாடு மேற்கொள்ளும் பொதுமக்கள் இம்மாதம் முழுவதும் அசைவ உணவைத் தவிர்ப்பது வழக்கம். இந்த நிலையில் இன்று (செப்.18) முதல் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனைக் கடைகளில் இறைச்சி வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக இறைச்சிக்கடைகளில் வியாபாரம் மந்தமான நிலையில் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளிலும் வியாபாரம் இல்லாததால் இறைச்சி விற்பனையாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
புரட்டாசி மாதம் முழுவதும் வியாபாரம் மந்தமாக இருக்கும் என இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை தினங்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டமாக குவிந்து இறைச்சி வாங்கும் சூழ்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதால் தற்போது இறைச்சிக்கடைகள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு