சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்றுவருகிறது. அதன்படி சத்தியா தியேட்டர் அருகே சாலையில் குழி தோண்டி பல மாதங்களான நிலையில் தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் உள்ளது.
இதற்கிடையில் தற்போது அங்கு மழை பெய்துவருவதால் மூடாமல் கிடக்கும் குழியில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
அதிலும் அச்சாலையில் மசூதி, மளிகைக்கடை மற்றும் மருத்துவமனை அமைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து நகராட்சியிடம் மனு அளித்த பிறகு சாலை சீரமைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து புதன்கிழமை அப்பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் அமுதா மற்றும் பொறியாளர் ரவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி சாலையை உடனடியாக சீரமைப்பதாக அளித்த உறுதிமொழியை அடுத்து போராட்டம் பொதுமக்கள் கைவிடப்பட்டது.