தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சாலையாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. சரக்கு லாரி உட்பட பல்வேறு வாகனங்கள் இச்சாலையை 24 மணி நேரமும் பயன்படுத்திவருகின்றன. இதில் தமிழ்நாடு எல்லைக்குட்பட்ட சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன.
இரண்டு மாநில எல்லைகளில் உள்ள கார்பள்ளம் சோதனைச்சாவடி முதல் சுவர்ணாவதி அணைவரை உள்ள இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சாலை கர்நாடக மாநில நெடுஞ்சாலைத்துறை சரிவர பராமரிக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமத்தை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனர்.
இதுகுறித்து சாம்ராஜ் நகர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் வாகன ஓட்டிகள் பல முறை முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து தாளவாடி மலைப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக அப்பகுதியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - நடத்துநர் உள்பட இருவர் உயிரிழப்பு!