தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவையை வழங்கிவருகிறது. தமிழ்நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருக்கும் இந்நிறுவனத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் கேபிள் இணைப்பைப் பெற்றுள்ளனர். தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
மேலும் பொதுமக்கள் தொலைக்காட்சியில் செய்திகள், திரைப்படம், நெடுந்தொடர்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கின்றனர். பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக தொலைக்காட்சி இடம்பெற்றுள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள், நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானமின்றி தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் ஒரு சில இடங்களில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாதாந்திர கேபிள் கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பொதுமக்கள் வருமானம் இல்லாததால் கேபிள் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
அரசு கேபிள் இணைப்பைப் பெற்றுள்ள பொதுமக்கள் ஏப்ரல், மே மாதங்களுக்கான கேபிள் கட்டணத்தை அரசு ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கரோனாவை எதிர்க்கும் ஆற்றல் தென்கிழக்காசிய மக்களுக்கு இயல்பிலேயே உண்டு' - மூத்த விஞ்ஞானி மாரியப்பன்