ஈரோடு: பவானி அருகே ஜல்லிகல் மேடு பகுதியில், காவிரி ஆற்றின் கரையில் பெரியாண்டிச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மாவாசை உள்ளிட்ட தினங்களில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வழிபாடு செய்துவந்தனர்.
நேற்று (ஜூலை 9) ஆனி அமாவாசையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூலை 10) காலை வழக்கம்போல, கோயிலைத் திறக்க பூசாரி வந்துள்ளார்.
கோயில் சிலைகள் சேதம்
அப்போது கோயிலில் இருந்த பெரியாண்டிச்சியம்மன், அங்காளம்மன், கருப்பராயன் உள்ளிட்ட சிலைகள் சேதமடைந்து இருப்பதைக் கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைதுசெய்யக் கோரி போராட்டம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி காவல் துறையினர், சேதமடைந்த சிலைகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக அங்கு ஒன்று திரண்ட கிராம மக்கள், சாமி சிலைகளைச் சேதப்படுத்தியவர்களைக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சிலைகளைச் சேதப்படுத்தியோர் கைதுசெய்யப்படுவர் என்ற காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும்வகையில், இருபதுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கு இரண்டாவது முறையாக சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொழிலதிபரைக் கடத்திய குற்றச்சாட்டில் காவலர்களுக்கு வலைவீச்சு