ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று, 542 பயனாளிகளுக்கு தலா இரண்டு ஆடுகள் வீதம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் விலையில்லா ஆடுகளை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர், "ஓடத்துறை ஊராட்சியில் 542 நபர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டிட்ட அனைவரையும் வெற்றி பெற செய்தீர்கள். ஆனால் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவரை மட்டும் தோற்கடித்துள்ளீர்கள். அதனால் இன்னும் பத்து நபர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்குவது தாமதமாகிறது.
தீங்கு விளைவிக்கும் நெகிழிப் பொருட்களை தடை விதித்ததன் அடிப்படையில், தமிழ்நாட்டில் 90 சதவிகிதம் நெகிழி ஒழிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை மூலம் பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி மரம் வளர்க்க ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 8 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையம் 1200 கோடி செலவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது", என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், சாய ஆலைகளில் கழிவு நீரை இரவில் தெரியாமல் திறக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அனுமதி பெறாத சாய ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'வல்லாளகண்டனை வதம் செய்த காளி' - ஆக்ரோஷ நடனம்