ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆலத்துக்கோம்பையில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகள் கிருத்திகா (19) விடுதியில் தங்கி இசிஇ இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
இந்நிலையில், இன்று காலை கிருத்திகா தங்கியிருந்த அறையின் கதவு திறக்காததால் சக மாணவிகள் சந்தேகம் அடைந்து கல்லூரி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கிருத்திகா மின்விசிறில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
உடனே இது குறித்து கிருத்திகாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சத்தியமங்கலம் காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கிருத்திகாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.