ஈரோடு மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும், ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் இயங்கி வருகின்றன. விசைத்தறிகளை நம்பி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் விரைவில் ரத்து செய்யப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு, விசைத்தறியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பாதிப்பின் காரணமாக 60 நாள்களுக்கும் மேலாக தொழிற்சாலைகள் இயங்காமல், தொழிலாளர்களுக்கான கூலியையும், தொழிற்சாலை வாடகை, மின்சாரக் கட்டணங்களை மிகவும் சிரமப்பட்டு செலுத்தி வரும் நிலையில் இதுபோன்ற அறிவிப்பு விசைத்தறிகளை முடக்கி விடும் அறிவிப்பாக உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்து விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதைப்போலவே விசைத்தறியாளர்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கடந்த மூன்று மாதங்களாக தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் பெருமளவு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அக்டோபர் மாதவாக்கில் அரசு வழங்கும் விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பை முன்கூட்டியே தற்போது வழங்கிட வேண்டும் என்றும், விசைத்தறி உரிமையாளர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைக்கு ஊரடங்கு உத்தரவுக் காலத்திற்கு வட்டித் தொகையை தள்ளுபடி செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக விசைத்தறித் தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மத்திய அரசின் இலவச மின்சார அறிவிப்பை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாமல் தங்கள் தொழிலையும், தொழிலை நம்பியுள்ள லட்சக் கணக்கானவர்களையும் பாதுகாத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 'இலவச மின்சாரம் வழங்கினால் மட்டுமே மின் திருத்தச் சட்டத்தை ஏற்போம்' - அமைச்சர் தங்கமணி