ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் சுப்புநகரில் மக்கள் பங்களிப்புடன் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள ஊஞ்சலில் குழந்தைகளை வைத்து ஆட்டிவிட்ட அமைச்சர் பின்னர் பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டை ஊக்கப்படுத்த "அம்மா இளைஞர் விளையாட்டு அரங்கம்" கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறைக்கு வரும் 13ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சருன் கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும். கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் அரசின் இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்கள் சேர்க்கையை நடத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. இதனை என் கவனத்திற்கு யார் வேண்டுமானும் கொண்டு வரலாம் அப்படி கொண்டுவருகின்றபோது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என வதந்திகளை பரப்பிவருகிறார்கள். காலை உணவு வழங்குவது குறித்து முதலமைச்சர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்தியே தவிர வேறென்றும் இல்லை' என்றார்.
அரசு பள்ளிகளில் தேர்வுக்காக வசூலிக்கப்படும் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஏழை எளிய மாணவர்கள் எங்கு உள்ளார்களோ அங்கு ரத்து செய்ய அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: கொலையாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.7 லட்சம் ரெடி